தேசிய பயங்கரவாத கூட்டு பயிற்சியில் தமிழக கமாண்டோ படை 2ம் இடம் பிடித்து சாதனை: டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: தேசிய அளவிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக கமாண்ேடா படை வீரர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய அளவிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி-2022 என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு படையினரால் ஹரியானா மாநிலத்தில் உள்ள மானேசர் முகாமில் கடந்த 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த பயிற்சியானது மாநில பயங்கரவாத எதிர்ப்பு படைகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த போட்டியில் மாநில அளவில் தமிழ்நாடு கமாண்டோ படை மற்றும் ஹரியானா, மேகாலாயா, உத்தரபிரதேசனம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில காவல்துறை சார்பில் படைகள் பங்கு பெற்றன. இந்த கூட்டுப்பயிற்சி மற்றும் போட்டியின் போது என்எஸ்ஜி பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு பயங்கரவாதிகள் சதியை எவ்வாறு முறியடிப்பது பற்றியும், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தும் போது பங்கரவாதிகளை எதிர்த்து எவ்வாறு பிணைய கைதிகளை மீட்பது மற்றும் ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் இறங்குதல் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சிகளில் திறம்பட பயிற்சி பெற்ற சிறந்து விளங்கிய அணியை தேர்வு செய்தனர். மேலும், ஒவ்வொரு அணியின் கமாண்டோக்களின் உடல் தகுதித்திறன், பகல் மற்றும் இரவு நேரங்களில் துப்பாக்கி சுடும் திறன், கமாண்டோ தடைகளை கடக்கும் திறன், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் திறன் போன்ற தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. தமிழநாடு கமாண்டோ படையை சேர்ந்த 18 கமாண்டோக்கள் கொண்ட அணி துறை தளவாய் வேலு தலைமையில் இப்போட்டியில் திறமையுடனும், வீரத்துடனும் செயல்பட்டு, இவ்வணியின் கூட்டு முயற்சியால் இந்திய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி-2022 போட்டியில் 2ம் இடம் பற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

இதையடுத்து தேசிய அளவிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டில் 2ம் இடம் பிடித்த தமிழக கமாண்டோ படை வீரர்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: