போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: தாம்பரம் கமிஷனர் ரவி எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள ஜியோன் பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தேர்வு குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி, மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் போதை பொருள் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போதை பொருட்கள் விற்பனை இளைய சமுதாயத்தை சீரழித்து உடல்நலனை பாதிக்கிறது. எனவே, போதை பொருட்கள் மற்றும் போதை சாக்லெட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருள்  விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். அவற்றின் விற்பனையை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக பகுதிகளில் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

 உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: