பஞ்சாப்பை வீழ்த்தி லக்னோ; 6வது வெற்றி: 20 ஓவர்களும் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர்; கேப்டன் கே.எல்.ராகுல் பாராட்டு

புனே: ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடந்த 42வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டிகாக் 46 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார். தீபக் கூடா 34, சமீரா 17, மொஹ்சின் கான் 13 ரன் எடுத்தனர். கே.எல்.ராகுல் 6, ஸ்டாய்னிஸ் 1, படோனி 4 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4, ராகுல் சாகர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் 25, தவான் 5, பேர்ஸ்டோவ் 32, ராஜபக்சே 9, லிவிங்ஸ்டன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரிஷிதவான் நாட்அவுட்டாக 21 ரன் எடுத்தார். 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களே பஞ்சாப் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சில் மொஹ்சின் கான் 3, குர்னல் பாண்டியா, சமீரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2 ஓவரில் 11 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்த குர்னல் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். 9வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற லக்னோ பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

பஞ்சாப் 5வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: முதலில் பேட்டிங் செய்த பிறகு நான் ஏமாற்றம் அடைந்தேன். ஏனெனில் நாங்கள் போதுமான ரன் எடுக்கவில்லை. இந்த பிட்சில் 160 ரன் பாதுகாப்பான ஸ்கோர் என பேசினோம். ஆனால் கடைசி ஓவர்களில் பவுலர்கள் 25-30 ரன் எடுத்த விதமும், பின்னர் 20 ஓவர்கள் முழுமையாக அவர்கள் பந்துவீசிய விதமும் அற்புதமானது. நாங்கள் ஒரு அணியாக விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பேட்டிங் யூனிட் நாங்கள் திரும்பிச் சென்று சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

டாப் 3 பேரில் ஒருவர் 70 -80 ரன்களை எடுத்திருந்தால், ஒருவேளை 10, 15 ரன் கூடுதலாக கிடைத்திருக்கும், ஆனால் அது நடக்கவில்லை. 4 ஓவர் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்தோம், குர்னல் போட்டி முழுவதும் புத்திசாலித்தனமாக இருந்தார். எல்லா ஐபிஎல் சீசனிலும் அவர் எப்பொழுதும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருப்பார். ஆனால் இந்த சீசனில் அவர் தனது பந்துவீச்சில் உழைத்து, நடுவில் முக்கியமான விக்கெட்டுகளை எங்களுக்கு பெற்றுத் தருகிறார். நடு ஓவர்களில் 2, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அது உண்மையில் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கிறது, அதைத்தான் அவர் அற்புதமாகச் செய்து வருகிறார், என்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன்மயங்க் அகர்வால் கூறுகையில், நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை. தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ரபாடா எங்களுக்கு எப்போதும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து வருகிறார், என்றார். ஆட்டநாயகன் குர்னல் பாண்டியா கூறுகையில், நான் நன்றாக பந்துவீசுகிறேன். கடந்த 7-8 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். எனக்கு பெரிய உதவியாக இருந்த ராகுல் சங்வியை (பயிற்சியாளர்) குறிப்பிட விரும்புகிறேன். பேட்டிங்கும் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அதில் பங்களிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

Related Stories: