×

மக்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு பணித்தது சீன அரசு!: பல்வேறு மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு..!!

பெய்ஜிங்: சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து முக்கிய நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் பரவி வரும் மரபணு மாற்றம் அடைந்த ஓமிக்ரான் கிருமி அதிக பரவும் தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக பெய்ஜிங், ஜின்ஜியாங் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜின்ஜியா மாகாணம் உரும்கி நகரில் கடந்த 24ம் தேதி கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. ஆரம்பத்தில் ஜின்ஜியா மாகாணத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர் நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. உள்நாட்டில் மட்டுமின்றி இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்களும் தங்கள் நாட்டு மக்களுக்கு குரல் கொடுத்து சீன தூதரகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பல்வேறு மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, தொற்று குறைவான பகுதிகளில் கடைகளை திறக்கவும், உரிய பாதுகாப்புடன் அரசு பேருந்துகளை இயக்கவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மக்கள் செல்ல தடையில்லை எனவும் சீன அரசு அறிவித்துள்ளது.

Tags : Chinese government , People, protest, Chinese government, Corona restrictions
× RELATED ரூ.25 லட்சம் கோடி கடன் சீன ரியல் எஸ்டேட்...