×

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விபரீதம்; ரூ15 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை: போரூரில் பரபரப்பு

பூந்தமல்லி: சென்னை போரூர், விக்னேஸ்வரா நகரில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் பிரபு (39). இவரது மனைவி ஜனனி (எ) இந்து (36). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். பிரபு, குடிப்பழக்கம் உடையவர். கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது மனைவி ஜனனிக்கு தெரியவர, கணவருடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வேலை முடிந்து நேற்றிரவு வீட்டுக்கு வந்தார் ஜனனி. படுக்கை அறையில், பிரபு தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

உடலை பார்த்து கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்தனர். தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரபுவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரபு, கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். அதில், சுமார் ரூ15 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும் கடன் வாங்கி மது அருந்தியுள்ளார்.

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை அடைக்கும்படி பிரபுவுக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த விவகாரம் ஜனனிக்கு தெரியவர, குறிப்பிட்ட தொகையை வங்கியில் செலுத்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அதற்குள் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. பிரபுவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Borur , Tragedy in Online Rummy Game; Teenager commits suicide after losing Rs 15 lakh: stir in Borur
× RELATED போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை...