×

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடியில் புதுப்பொலிவுக்கு தயாராகிறது பாளை. காந்தி மார்க்கெட்: அடுத்த மாதம் இறுதியில் கடைகளை இடிக்க முடிவு

நெல்லை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடியில் புதுப்பொலிவு பெறும் 60 ஆண்டு கால பாளை காந்தி மார்க்கெட்டில் கடைகளை இடிக்கும் பணிகள் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. புதிய மார்க்கெட் கட்டப்பட்டு புழக்கத்துக்கு வரும் போது நெல்லை மாநகராட்சிக்கு ரூ.2.08 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட், வேய்ந்தான்குளம் புதிய பஸ்ஸ்டாண்ட், பாளை பஸ் ஸ்டாண்ட், நேருஜி கலையரங்கம் ஆகியவற்றின் பணிகள் கடந்த 2018ல் தொடங்கியது. இதில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் தவிர மற்ற பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.

அதே ஆண்டில் பாளை. காந்தி மார்க்கெட்டை முற்றிலும் இடித்து விட்டு, புதிய கடைகளை கட்டும் பணி தொடங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் புதிய கடைகள் அமைத்துத் தந்தால் மட்டுமே காலி செய்வோம் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாலும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாலும், பாளை மார்கெட்டை இடிக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாளை. ஜவஹர் திடல், போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் தகர செட் அமைத்து கடைகளை ஒதுக்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வியாபாரிகள் அடுத்த மாதம் கடைகளை காலி செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் பாளை. காந்தி மார்க்கெட் கடைகளை இடிக்கும் பணி அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாளை காந்தி மார்க்கெட் 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1962ல் பாளையின் இதயப்பகுதியில் 1.22 ஏக்கரில் அமைக்கப்பட்டது.

ஆனால் மார்க்கெட்டுக்குள் நடைபாதை மிகவும் குறுகலாக இருப்பதால் கடைகளுக்கு காய்கறிகள் மற்றும் சரக்குகளை சுமையாகவே வியாபாரிகள் கொண்டு வந்தனர். வாகனங்களை நிறுத்துமிடமும் கிடையாது.  மேலும் சாலையின் உயரத்தை விட மார்க்கெட்டின் மட்டம் தணிவாக இருப்பதால் மழை நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து இறங்கி விடுகிறது. மார்க்கெட்டுக்குள் வடிகால் வசதியும் இல்லை. இந்நிலையில் மார்கெட்டை நவீனப்படுத்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் வாய்ப்பளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி தரைத்தளம் மற்றும் அன்டர் கிரவுன்ட் பார்க்கிங் வசதிகளோடு மொத்தம் 3,877 சதுர மீட்டரில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் அன்டர்கிரவுன்ட் வாகன நிறுத்துமிடம் 3553 சதுர மீட்டரில் 27 நான்கு சக்கர வாகனங்களும், 819 இருசக்கர
வாகனங்களும் நிறுத்தும் வகையில் கட்டப்படுகிறது. தரைதளத்தில் 1835 சதுர மீட்டர் வணிகப்பகுதியாக கட்டப்பட்டு, அதில் 172 கடைகள் அமைய உள்ளன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் கிடைக்கும். மேலும் 50 டன் வரையில் காய்கறிகள், பழங்களை பதப்படுத்த குளிர்சாதன குடோன் கட்டப்படுகிறது.

இதன் மூலம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் வருமானம் மாநகராட்சிக்கு கிடைக்கும். கட்டண கழிப்பிடம் மூலம் ரூ.19.35 லட்சம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. கார் பார்க்கிங் மூலம் ஆண்டுக்கு ரூ.5.73 லட்சமும், இரு சக்கர வாகன காப்பகம் மூலம் ரூ.77.82 லட்சமும் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டு மொத்தமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் புதிய காந்தி மார்க்கெட் மூலம் மாநகராட்சிக்கு ரூ.2.08 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பின்னர் பாளை காந்தி மார்க்கெட்டின் பழைய கடைகள் வருகிற டிசம்பர் 26க்கு பிறகு முற்றிலும் இடிக்கப்பட உள்ளது. புதிய மார்க்கெட் கட்டிடம் கட்ட எப்படியும் குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

Tags : Pali ,Gandhi Market , Palai is getting ready for Puducholi at a cost of Rs 14.90 crore under the 'Smart City' project. Gandhi Market: Decision to demolish shops by the end of next month
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...