×

தேனி மாவட்டத்தில் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடுது தண்ணீர்: குழந்தைகளை ஆற்றங்கரையோரங்களுக்கு அனுமதிக்காதீர்கள்

ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.

இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிக மழைபெறும் காலங்களில் நீர்வரத்து அதிகரித்தால், ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதுபோல் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

விவசாயிகள் அதிக மழைபொழிவு ஏற்படும் காலங்களில் மழைநீரில் நெற்பயிர் மூழ்கியுள்ள தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட வேண்டும். வயலில் தேங்கியுள்ள நீரை வயல் மட்டத்தை விட ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். மேலும் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு மாவட்ட சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் , கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது.

பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும், என்றனர்.

Tags : Theni district , Do not allow water, children and riverbanks to wade in rivers
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்