×

காரைக்கால் கடற்கரை அலையாத்தி காட்டில் வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை வரத்து குறைவு: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது காரைக்கால் கடற்கரை. இங்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காரைக்கால் கடற்கரைக்கு வந்து செல்கின்றன. இதனால் மாவட்டத்திற்கு சுற்றுலாவாசிகள் வருகையால் முக்கிய வருமானம் கிடைக்க இடமாகவும் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தற்போதைய மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், துணை மாவட்ட ஆட்சியராக இருந்த போது காலியாக இருந்த சதுப்பு நிலத்தில் ஆயிரக்கணக்கான மாங்குரோ வகை மர கன்றுகளை இங்கு நட்டு வைத்தார். தற்போது பல ஏக்கர் அளவில் இயற்கையாக அலையாத்திக் காடு அமைந்துள்ளது.

இந்த வகை காடுகள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின் போது, குடியிரு ப்பு பகுதியில் தண்ணீர் செல்வதை தடுக்கும் திறன் படைத்தது என்பதால்,மாவட்ட நிர்வாகம் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சுமார் ரூ.6 லட்சம் செலவில் ஏராளமான அலையாத்தி செடிகளை வளர்த்தது.கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த செடிகள் பெரிய அளவில் காடுகளாக வளர்ந்து நின்றதால், சைபீரியா,அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து,இலங்கை வழியாக தமிழகப்பகுதியான கோடியக்கரை, கூடங்குளம்,வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களுக்கு செல்லும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள், காரைக்கால் அலையாத்தி காடுகளில் பறவைகள் தங்கி இறை தேடியும், இளைப்பாறியும் இனப்பெருக்கம் ஏற்படுத்தி சென்றது.

ஆனால்,மாவட்ட நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்துறை கீழ் செயல்படும் வனத்துறையும், இந்த பறவைகள் விசயத்தில் போதிய அக்கறை காட்டாததால்,அலையாத்தி காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பறவைகள் வேட்டையாடுவோர் அதிகரித்தனர்.குறிப்பாக அலையாத்தி காட்டின் உள்ளே புகுந்து பறவைகளை வேட்டையாடுவதை யாரும் தடுக்கவில்லை.

மேலும் தற்போது அலையாத்தி காட்டினுள் ஏகப்பட்ட முள் செடிகள் வளர்ந்து இருப்பதால் பறவைகள் இறகுகள் அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றனர். இதனால் வருடத்திற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்த சென்ற இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அலையாத்திக்காடு பராமரிப்பு இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்து விரல் விட்டு எண்ணும் அளவில் பறவைகள் எண்ணிக்கையில் தற்போது வருவது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அலையாத்தி காடு முழுமையாக பராமரித்து வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இயற்கையாக தீவுப்போல் அமைந்துள்ள அலையாத்திக்காட்டை சீர்செய்து சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதனால் புதுச்சேரி அரசுக்கும் அதிக அளவில் வருவாய் கிடைக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாவாசிகள் அதிகம் வருவதால் காரைக்கால் வளர்ச்சிப்பெறும் என்பது காரைக்கால் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags : Karaikal , Low number of foreign birds in Karaikal coastal migratory forest: Tourists disappointed
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...