×

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு: கனத்த இதயத்துடன் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி..!!

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி காலை நடைப்பயிற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதான நிலையில் லட்சுமி யானையை அழைத்து வந்தது. இது மற்ற யானைகளை போல் அல்லாமல், பக்தர்களிடம் அன்பாக பழகி வந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோயில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள்.

ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள தங்கும் இடத்தில் இருந்து நாள்தோறும் கடற்கரை சாலையில் லட்சுமி யானை நடைப்பயிற்சி மேற்கொள்ளும். காலையும் வழக்கம் போல பாகன் சக்திவேலுடன் நடைப்பயிற்சிக்கு புறப்பட்ட யானை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. கடந்த 2017ம் ஆண்டு லட்சுமியை காட்டில் விட அனுப்ப அப்போதைய துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

அதனை போராடி தடுத்த புதுச்சேரி மக்கள், தற்போது லட்சுமி இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுகின்றனர். கிரேன் மூலம் யானையின் உடல் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சுமியின் மறைவால் மணக்குள விநாயகர் கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அதன்பின் அடக்கம் செய்யப்படுகிறது.


Tags : Gadugula , Puducherry Manakula Vinayagar Temple elephant Lakshmi, loss of life, tearful tribute
× RELATED BE மற்றும் பிடெக்கிற்கு மே முதல்...