காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற ஐடி இன்ஜினியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை; அசோக் நகர் போலீசார் விசாரணை

சென்னை: காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்த நேரத்தில், சென்னையில் ஐடி மென்பொறியாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம் மூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூரிய நாராயணன் (55). இவர், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வருகிறார். ஐடி மென்பொறியாளர். தனது குடும்பத்துடன் கடந்த 25ம் தேதி காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டின் பொறுப்பை பணிப்பெண் விஜயாவிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் பணிப்பெண் விஜயா, சூரியநாராயணன் வீட்டை பார்க்க சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து சூரியநாராயணனுக்கு போன் செய்து தகவல் அளித்தார். பின்னர் சூரியநாராயணன் செல்போன் மூலம் பணிப்பெண் விஜயா வீட்டிற்குள் சென்று பார்க்க கூறியுள்ளார்.

அதன்படி அவரும் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு இதில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. விஜயா மூலம் அசோக்நகர் காவல்நிலையத்தில் சூரியநாராயணன் புகார் அளித்தார். அதன்படி அசோக் நகர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூர்த்தி ெதருவில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். சூரிய நாராயணன் ஆன்மிக சுற்றுலா சென்ற விவரங்களை அறிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: