ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழியை மேயர் பிரியா வாசித்தார். தொடர்ந்து, அவர் கடந்த மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அரசு துறையினருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார். கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்தார். இதையடுத்து நேரமில்லா நேரத்தில் நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் பேசியதாவது: கடந்த கால நிர்வாக திறமை இல்லாத ஆட்சியாளர்களால் சென்னை மாநகரம் சேதப்படுத்தப்பட்டது. இந்த முறை சென்னையில் பருவமழையின் போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்வர் சீரிய முயற்சியால் மாநகர மேயர், ஆணையர், கவுன்சிலர்களின் பணியால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை. இதற்காக நான் அதிகாரிகளுக்கும் அரசுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நிலம் மற்றும் உடைமை துறை மூலம் மாநகராட்சியின் 446 நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதற்கான குத்தகை கேட்பு தொகை கடந்த 31.3.2021 வரை ரூ.419 கோடி உள்ளது. ஆனால் அதில் வசூலான தொகை ரூ.2.69 கோடி மட்டுமே. நிலுவைத் தொகை ரூ.416 கோடி பாக்கி  உள்ளது. கல்வி பயன்பாட்டிற்காக தனியார் பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு குத்தகை விடப்பட்ட மாநகராட்சி நிலத்திற்கு வர வேண்டிய நிலுவை தொகை மட்டும் ரூ.248 கோடி. உதாரணத்திற்கு, அசோக் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி குத்தகை தொகை ரூ.69 லட்சம் இதுவரை செலுத்தாமல் வைத்துள்ளது. இதுபோன்று 9 கல்வி நிறுவனங்கள் குத்தகை தொகை செலுத்தாமல் உள்ளன.

 

அதேபோன்று, வணிக பயன்பாட்டிற்காக வால்டாக்ஸ் ரோட்டில் மட்டும் வழங்கப்பட்ட 201 நிலங்களில் ரூ.92 கோடியும், மற்ற இடங்களில் வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 75 நிலங்களில் ரூ.45 கோடியும், குடியிருப்புக்காக வழங்கப்பட்ட 136 நிலங்களில் ரூ.8 கோடியும், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 6 நிலங்களில் ரூ.3.96 கோடியும், மதச்சார்புடைய அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட 4 நிலங்களில் மாநகராட்சிக்கு வர வேண்டிய குத்தகை தொகை நிலுவையாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் 62 வழக்குகள் காரணமாகவும் குத்தகை தொகை வசூலிக்க இயலாமல் உள்ளது. இந்த வழக்குகளை விரைந்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று குத்தகை தொகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு வெறும் நினைவூட்டல் கடிதம் மட்டுமே அனுப்பப்படுகிறது. விரைந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து நிலுவை தொகையை வசூலிக்க வேண்டும். வசூல் மற்றும் நிலுவைத் தொகை விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யவும் இல்லை. இதன் காரணமாக பல நிலங்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் உடனடியாக அதன் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்தவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவைகள் நிலம் மற்றும் உடைமை துறையில் மாநகராட்சி சந்தித்து வரும் மிகப்பெரிய இழப்புகளாகும். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் மாநகராட்சி தனது நிலங்களை இழக்க நேரிடும்.

2020-21ம் ஆண்டு சொத்து வரி ரூ.1012 கோடி. ஆனால் வசூலான தொகை ரூ.409 கோடி மட்டுமே. நிலுவைத் தொகை ரூ.602 கோடி. இதேபோன்று தொழில் வரியில் கேட்கப்பட்ட தொகை ரூ.852 கோடி. ஆனால் வசூலானது வெறும் ரூ.76 கோடி மட்டுமே. இந்த குறைபாட்டை களைய உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சொத்து மதிப்பினை மறுசீராய்வுக்கு உட்படுத்தி அவற்றிற்கு தற்போதைய சீர்திருத்தப்பட்ட வரி விதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். இதை குறிப்பிட்டு சொல்ல காரணம், எனது நிலைக்குழு தணிக்கை ஆய்வின் போது, 8வது மண்டலத்தில் இயங்கி வரும் பிரபல நகைக்கடை நிறுவனம் தனது வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வரும் நிலத்திற்கு பல ஆண்டுகளாக குடியிருப்பிற்கான அடிப்படையில் வரி செலுத்தி வருகிறது. கோடிக்கணக்கில் வணிகம் செய்து கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 1129 கட்டிடங்களில் தனியார் பள்ளிகள் சுயநிதி கல்லூரிகள் இதர கல்வி பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் செலுத்த வேண்டிய வரி சொத்து வரி ஒன்பது கோடிக்கு மேல் உள்ளது. இதனை உடனடியாக வசூலிக்க வேண்டும். வங்கிகளால் மறுக்கப்பட்ட காசோலைகள் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11 கோடியாக உள்ளது. இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? தனியார் உதவி மூலம் நிலுவைத் தொகை வைத்திருப்பவர்களிடம் வசூலிக்க வேண்டும். அதேபோல் கம்பெனி வரி 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

 

இவ்வாறு அவர் பேசினார். நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகளாக அம்மா உணவகத்தால் இதுவரை ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி உள்ளது. இது மாநகராட்சிக்கு பெரிய இழப்பாகும். இதை சரி செய்யும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். மேயர் பிரியா: அம்மா உணவகம் இப்போது எப்படி செயல்படுகிறதோ அதேபோன்று தொடர்ந்து செயல்படும். மிகவும் வருமானம் குறைவாக உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகங்களுக்கு ஊழியர்கள் தேவைப்பட்டால் அந்தந்த வார்டு கவுன்சிலர்களே தேர்வு செய்து செய்து நியமிக்கலாம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: