×

சேலையூர் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தர்ணா

தாம்பரம்: தாம்பரம், சானடோரியம் பகுதியில் சேலையூர் ஆய்வாளரை கண்டித்து, நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் 7 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் மூர்த்தி. இவர், கடந்த 27ம்தேதி இரவு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சினிமா பார்க்க சென்று விட்டு நள்ளிரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிட்லபாக்கம் அருகே ராஜேந்திர பிரசாத் சாலையில் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன், ஆவணங்கள் அனைத்தும் இருந்த நிலையில், வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பியுள்ளார்.

அதேபோல, சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து, வழக்கு சம்பந்தமாக வரும் வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, நிலம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் அளித்த புகாரில் நிலத்தை விற்பனை செய்ய மறுத்த நபரை விற்க கட்டாயப்படுத்தியது, விசாரிக்க சென்ற வழக்கறிஞரை உள்ளே அனுமதிக்காதது என பல்வேறு சிவில் வழக்குகளில் தலையிட்டு பணம் பார்த்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் காட்வின் சாத்திரக் என்பவரது வீட்டில் சுமார் 55 சவரன் நகை கொள்ளைபோனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும், புகார் குறித்து விசாரிக்க சென்றால் ஒருமையில் பேசி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் சிட்லபாக்கம் உதவியாளர் பிரபாகரன் ஆகியோரை கண்டித்து, தாம்பரம், சானடோரியம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அமர்ந்து நீதிமன்றத்தை புறக்கணித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று 10.30 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவி ஆணையர் சீனிவாசனை பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் துணை ஆணையர் வரவேண்டும் என தெரிவித்து தொடர்ந்து போராட்டம் செய்தனர். தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, வழக்கறிஞரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் அவரிடம் வருத்தம் தெரிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், மாலை 5.30 மணியளவில் போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.

Tags : Selaiyur , Lawyers stage dharna to condemn Selaiyur inspector and boycott court
× RELATED வங்கதேசம் எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது