கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 2 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்; 20 பேரை நிராகரித்த பின் நியமனம்

புதுடெல்லி: கொலிஜியம் பரிந்துரையை ஏற்று, 2 வக்கீல்களை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 25ம் தேதி 20 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அனுப்பிய கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம், ‘‘கொலிஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருத வேண்டுமே தவிர ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட கூடாது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளி விட வேண்டாம். சட்டம் இருக்கும் போது அதை முறையாக பின்பற்ற வேண்டும்’’ என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கொலிஜியம் பரிந்துரையின் படி, வக்கீல்கள் சந்தோஷ் கோவிந்தராவ் மற்றும் மிலிந்த் மனோகர் சதாயே ஆகியோர் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு டிவிட்டரில் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: