விஜய் ஹசாரே கோப்பையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள்

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் இன்று கர்நாடகா-சவுராஷ்டிரா, மகாராஷ்டிரா-அசாம்  அணிகள் மோதுகின்றன. கடந்த 12ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் ஆலூர், கொல்கத்தா உள்பட 7 நகரங்களில் நடந்தன. நடப்பு சாம்பியன் இமாச்சல் லீக் சுற்றுடன் வெளியேற, கடந்த முறை 2வது இடம் பிடித்த தமிழ்நாடு காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சவுராஷ்டிரா, கர்நாடகா, மகாராஷ்டிரா,  அசாம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில்  கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் கர்நாடகா தான் விளையாடிய 7 ஆட்டங்களில் 6ல் வென்று பி பிரிவில் 24 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றாலும், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஜார்கண்டை வீழ்த்திய பிறகே காலிறுதிக்குள் நுழைந்தது.

ஆனால் சவுராஷ்டிரா ஏ பிரிவில் 7 ஆட்டங்களில் 5ல் வென்று  20 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்று நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும், கடைசியாக மோதிய 5 ஒருநாள் ஆட்டங்களில் கர்நாடகா 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனால் 5வது முறையாக கர்நாடகா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம். 2வது அரையிறுதியில்  மகாராஷ்டிரா-அசாம் அணிகள் மோதுகின்றன. மகாராஷ்டிரா  லீக் சுற்றில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று 24 புள்ளிகளுடன் இ பிரிவில் முதலிடம் பெற்றது. அதேபோல் அசாம்  விளையாடிய  7 ஆட்டங்களில் 6ல் வென்று, பி பிரிவில்  24 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்தது. இரு அணிகளுமே முதல் முறையாக பைனலுக்கு முன்னேற வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: