×

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தள்ளிவைக்க, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு பட்டியலில் உள்ளபடி டிசம்பர் 6ம் தேதி கண்டிப்பாக விசாரிக்கப்படும் என திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வமும், அதேப்போன்று அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்து, அதேப்போன்று நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனியாக கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் எனவும், அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒரு இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு என்பது அற்பமானது என்றும், தமக்கு தான் அதிகப்படியான பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு மேல்முறையீட்டு மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் விளக்கமனு தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 21ம் தேதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்னிலையில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நவம்பர் 30ம் தேதிக்கு (இன்று) விசாரிப்பதாக முந்தைய விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினத்திற்கு பதிலாக டிசம்பர் 6ம் தேதி விசாரணை பட்டியலில் வழக்கு இடம்பெற்றுள்ளது. அதனால் அன்றைய தினம் பட்டியலில் இருந்து நீக்காமல் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் கட்சி பணிகள் அனைத்தும் நிலுவையில் இருக்கிறது என தெரிவித்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ‘எங்களது தரப்பு விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். எங்களுக்கு கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் டிச.13ம் தேதிக்கு வழக்கை பட்டியலிட வேண்டும்’ என தெரிவித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு கண்டிப்பாக பட்டியலில் உள்ளபடி டிச.6ம் தேதி விசாரிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்து உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,O. Panneerselvam ,Supreme Court , AIADMK general committee rejects O. Panneerselvam's request to postpone case hearing; Supreme Court action order
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...