தமிழை 2வது மொழியாக அறிமுகம் செய்ய வடகிழக்கு மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: தமிழ் மொழியை 2வது மொழியாக அறிமுகம் செய்வதற்கு அந்தந்த மாநில முதல்வர்களுடன் பேசி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. அதில் 2017-2018, 2019-2020, 2020-2021 ம் கல்வி ஆண்டுகளில் பட்டம் படித்து முடித்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 922 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் 406 பேர் நேரடியாகவும், கல்வியில் சிறந்த விளங்கிய 47 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றுகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நாம் போட்டி நிறைந்த சமூகத்தில் இருக்கிறோம். அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறோம். செயற்கை தொழில் நுட்பம், இயந்திரவியல் என அனைத்திலும் மேம்பட்டு வருகிறோம். புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்துக்கு போதாது. அதையும் தாண்டி, திறன் சார்ந்த கல்வி தேவைப்படுகிறது. புதுமைகளை சோதனைப் படுத்தி மாணவர்களாக கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பட்டம் முடிவல்ல. உங்கள் திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாதது.

தமிழ்நாடு கல்வி வளர்ச்சியை நாடு நீண்ட காலமாக அறிந்துள்ளது. தாய் மொழியின் மூலம் தான் அறிவை நாம் வளர்க்க முடியும். தமிழ்மொழியின் பெருமையை வடமாநில முதல்வர்கள் அறிந்துள்ளனர். திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க அதை மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. அதற்கு முதல் கட்டமாக காசி தமிழ்ச் சங்கமத்தில் 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை 2வது மொழியாக கொண்டு வர அந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் பேசியுள்ளேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Related Stories: