தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக, ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு கட்டிட நிர்வாக அலுவலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கை அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மேற்படிப்புக்கான இரண்டு இடங்களை துவக்கி வைத்தும், மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து நுண்ணுயிர்க்கொல்லி பயன்பாட்டுக் கொள்கை என்னும் புத்தகத்தையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை 80 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. எனினும், முதலாமாண்டு சேரும் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில்தான் முதலில் நடக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கை அறுவை சிகிச்சைக்கான மேற்படிப்பு இடங்கள் துவங்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி என்று சொன்னாலே கை ஒட்டு அறுவை சிகிச்சையில் சிறப்பு வாய்ந்த மருத்துவமனை என்று அனைவருக்கும். ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4,9,527 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் லிப்ட் பிரச்னை இருந்தது. அங்கு இருக்கும் 24 லிப்ட்டுகளையும் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 லிப்ட்டுகள் தற்பொழுது மாற்றப்பட்டு இருக்கிறது.

அதே பிரச்னை தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ஏற்பட்டு இருக்கிறது. உறுதியாக பழுதடைந்த அனைத்து லிப்ட்டுகளையும் மாற்றி விட்டு புதிய லிப்ட்டுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளோம். குஜராத் தேர்தல் முடிந்ததும் நேரம் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்லூரி இயக்குனர் சாந்திமலர் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

* லிப்ட்டில் அமைச்சர் சிக்கியதால் பரபரப்பு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கை ஒட்டு உறுப்பு சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு நேற்று வந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு லிப்ட் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் இயக்கம் தடைபட்டது. சுதாரித்துக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சிறிது நேரத்துக்கு பின்னர் லிப்ட் ஆபரேட்டர் உதவியுடன் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினர்.

Related Stories: