கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம் கோலாகலம் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும் பக்தர்களுக்கு அருள்பலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3ம் நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள், அலங்கார ஆராதனை நடந்தது. பிரதோஷ மண்டபத்தில், 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், இரவு ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் பக்தி முழக்கமிட, சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் (பெரிய நாயகர்), வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.

6ம் தேதி உள்ளூர் விடுமுறை: கார்த்திகை மகா தீபவிழாவையொட்டி வரும் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

Related Stories: