×

கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்பப் பெறப்படும்: தமிழக அரசு அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறப்படும் எனக் கூறியதால் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்தது. நெல்லை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலைமுதுமணி விருதுகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கலைமாமணி விருதுக்கு வயது வரம்போ, தகுதியோ, நெறிமுறைகளோ இல்லை. 2019 முதல் 2020 வரையிலான கலைமாமணி விருதுகள் கடந்த 20.02.2021ல் வழங்கப்பட்டது. இதில், தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட சான்றிதழில் உறுப்பினர் - செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் அவசர கதியில் வழங்கியுள்ளனர். எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்ப பெறுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் விஜயா தாயன்பன் தரப்பில் அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘பல்வேறு தரப்பிலும் இருந்து வரப்பெற்ற கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில் அரசுத் தரப்பில் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக நிபுணர் குழு அமைத்து பணி நடந்து வருகிறது. இதனால், விருதுகள் வழங்குவது தொடர்பான பணிகள் நடக்கவில்லை. இந்தப் பணி முடிந்ததும், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் 20.2.2021ல் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களது கலைப்பணி அனுபவம் குறித்தும் இந்த நிபுணர் குழு ஆராயும். இதில் தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது திரும்ப பெறப்படும். தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது ரத்து செய்யப்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் துரிதமான நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ எனக்கூறி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர்.

Tags : AIADMK ,ICourt ,Tamil Nadu government , Kalaimamani award given to ineligible persons in last AIADMK regime will be withdrawn: ICourt branch praises Tamil Nadu government's announcement
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...