மத்தியில் சந்திரசேகர ராவின் ஆட்சி அமைந்தால் ஐடி ரெய்டு என்ற பேச்சே இருக்காது: தெலங்கானா அமைச்சர் பேச்சு வைரல்

திருமலை: மத்தியில் சந்திரசேகர ராவின் ஆட்சி அமைந்ததும் நாட்டில் வருமான வரித்துறை என்ற பேச்சே இருக்காது என பொதுக்கூட்டத்தில் தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திபேட்டில் நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் தெலங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி பேசியதாவது: 2024ம் ஆண்டு மத்தியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும். அவரது ஆட்சி அமைந்ததும் நாட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பேச்சே இருக்காது.  நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும்.  இனி வருமான வரி ரெய்டுகளும் இருக்காது. மக்கள் ஒருவரும் தங்களால் இயன்றதை சம்பாதிக்கலாம். தானாகவே முன்வந்து மக்கள் வரி செலுத்தும் வகையில் சந்திரசேகர ராவ் ஆட்சி நடத்துவார். இவ்வாரு அவர் தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைகேடு புகாரில் மல்லா ரெட்டி உட்பட 2 அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: