மக்கள் தொண்டு தவிர மாற்று சிந்தனை எனக்கு இல்லை சட்டம்-ஒழுங்கை கெடுக்க சதி: அரியலூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

பெரம்பலூர்: நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று  வயிறு  எரிகிறது. மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி என அரியலூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். தமிழ் காக்க - தமிழர் தம் நலம்காக்க, டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்று பெயர் சூட்டுவதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து, கல்லக்குடி கொண்டானாகப்படுத்து  தமிழ்க்குடி தொண்டனாக இருந்த கலைஞரை தலைவராக எழ வைத்த மாவட்டம் தான் இந்த  அரியலூர் மாவட்டம். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக 13வருவாய்  கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்களில் உள்ளடங்கிய  நிலங்களை, மீண்டும் உடமையாளர்களிடமே ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.

நிலுவையிலுள்ள மேலூர், இலையூர் மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொண்டைத்தவிர மாற்று சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. இன்றைக்கு போட்டி போட்டுக் கொண்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.

வேளாண்மை உற்பத்தி அதிகமாகி உள்ளது. பாசனப்பரப்பு வசதி அதிகமாகி உள்ளது. உயர், பள்ளிக்கல்வியிலும் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதியால் பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித்தந்துள்ளோம். இதனால் பெண்கள் ரூ.900 வரை சேமிக்க முடிகிறது. 15 மாத காலத்தில் 1.50 லட்சம் வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளை காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டினோம். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம்.

பெரம்பலூரில் சிப்காட் தொழில் பூங்காவை திறந்தோம். அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில் வளர்ச்சியில் நமக்கு கீழேதான் இருக்கிறது. இவை அனைத்தும், ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு நடத்தி  காட்டும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது. ஒரு முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால ஆட்சி.

தனது கையில் அதிகாரம் இருந்தபோது, கைகட்டி வேடிக்கை பார்த்து தனது  கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள்,  பொய் பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து  சிரிக்கிறார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர்  வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம்.

புலிக்கு பயந்தவன், என்மேல வந்து படுத்துக்கோ  என்று சொல்வார்களே, அதுபோல சிலர் “ஆபத்து ஆபத்து” என்று அலறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி சொல்லும் சிலருக்கு, ‘இருக்கும் பதவி நிலைக்குமா’ என்று பயமாக இருக்கிறது. அதனால் தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரை போல, உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.

தமிழகம் இழந்த  பெருமைகளை மீட்பது மட்டுமல்ல. இதுவரை அடையாத பெருமைகளையும் ,உயரத்தையும்  அடைவதுதான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக்குறிக்கோளை அடைய என்னை  ஒப்படைத்து கொண்டு நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு, இவர்களுடைய உழைப்பால், தமிழகம் அத்தகைய உயரத்தை விரைவில் அடையும் என்பதை  உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினர். முன்னதாக  அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா நன்றி தெரிவித்தார். விழாவில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, அன்பில் மகேஷ்  பொய் யாமொழி, சி.வெ.கணேசன், எம்பிக்கள் ஆ.ராசா , திருமாவளவன், எம்எல்ஏக்கள் பெரம்பலூர் பிரபாகரன், ஜெயங்கொண்டம்  கண்ணன், அரியலூர் (மதிமுக)கு.சின்னப்பா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஒரு  ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் திமுக அரசு நடத்தி காட்டும் செயல்கள்.

* ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது. ஒரு முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால ஆட்சி.

* மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி.

* விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது.

* தங்கள் கையில் ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா

யோக்கியரை போல, உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.

Related Stories: