மஞ்சூர் பகுதியில் மீண்டும் ரோட்டில் சாவகாசமாக உலா வந்த கரடி

மஞ்சூர்: மஞ்சூர் பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் பஜார் பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கரடி ஒன்று மஞ்சூர், கொட்டரகண்டி, கண்டிமட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உலா வந்த கரடி அப்பகுதிகளில் உள்ள கடைகள், அரசுப்பள்ளிகள், கோயில்களில் புகுந்து பொருட்களை சூறையாடி வந்தது.

இதையடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்தனர். தொடர்ந்து தொலைதூரமுள்ள முக்குருத்தி தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பங்கி தபால் வனப்பகுதிக்கு கொண்டு சென்று கரடி விடுவிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கரடி பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர்-கோவை சாலையில் பென்ஸ்டாக் பிரிவு அருகே கரடி ஒன்று நீண்ட நேரம் உலா வந்தது.

இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர். இதேபோல் முன்தினம் இரவு மஞ்சூர் தாய்சோலா சாலையில் பெரிய கரடி ஒன்று நடந்து சென்றுள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டில் சாவகாசமாக உலா வந்த கரடி பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றுள்ளது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் மீண்டும் கரடி நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: