மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு நீட்டிப்பு: நீர்வளத்துறை தகவல்

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கரூர் நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் மூலம்  சேலம், நாமக்கல்  மற்றும்  ஈரோடு மாவட்டங்களில் பாசனம் பெறும்  45,000 ஏக்கர்  பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு  16.07.2022 முதல் 137  நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து  மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்களில்  பாசனத்திற்கு 30.11.2022 முதல்  15.01.2023 வரை  நீட்டிப்பு செய்து  தண்ணீர் திறந்து விடுமாறு கோரிய மேட்டூர்  வலது கரை  (மேற்கு கரை) வாய்க்கால்  விவசாயிகள்  பாசன சங்கத்தின்  கோரிக்கையினை ஏற்று, மேட்டூர்  கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் பாசனத்திற்கு 30.11.2022 முதல் 15.01.2023 முடிய நாளொன்றுக்கு 600 கனஅடி / வினாடி வீதம் மேலும் 47 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து  தண்ணீர் திறந்து விட அரசு  ஆணையிட்டுள்ளது.

இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள    45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு 07.12.2022 முதல் 04.02.2023 வரை 40 நாட்களுக்கு 276.480 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் வட்டங்களிலுள்ள 19,480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என கூறப்படுகிறது.

Related Stories: