போடி அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

போடி: போடி அருகே பொட்டிபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்ஸை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போடி அருகே சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொட்டிபுரம் கிராம ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்கள். இந்த மக்களுக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பொட்டிபுரம் கிராம ஊராட்சி கிராமங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடமும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதையடுத்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நேற்று பொட்டிபுரம் பிரதான சாலையின் குறுக்கே கருங்கற்களை அடுக்கி வைத்து கயிறு கட்டி வைத்து போடிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பஸ்ஸை தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். பின் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போடி தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினர்.இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் ஒரு வாரத்தில் அங்கு வந்து ஆய்வு செய்து குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: