8-ம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து முடிவை வாபஸ் பெறவேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்

மதுரை: எட்டாம் வகுப்பு வரை சிறுபான்மை  மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து செய்துள்ள உத்தரவை திரும்பப்பெற  வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன், ஒன்றிய  அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஒன்றிய சிறுபான்மைத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானிக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது

சிறுபான்மை  மாணவர்களுக்கு பிரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல்  8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு  மேற்கண்ட வகுப்புகளுக்கு தரப்பட்டு இருந்த விண்ணப்பங்களும்  நிராகரிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். இது சிறுபான்மை சமூகங்களை சார்ந்த  ஏழை, அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ காரணம் காட்டி 1 முதல் 8ம் வகுப்பு வரை  கல்வி உதவித்தொகையை திரும்பப் பெறுவது எளிய மக்களுக்கு இழைக்கப்படும்  பெரும் அநீதி. மேலும் இது கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கையே எட்ட  விடாமல் தோற்கடிக்க கூடியதாகும். எனவே உங்கள் முடிவை மறு பரிசீலனை  செய்யுங்கள். ஆதார, நடுநிலைக் கல்வி முழுமைக்கும் கல்வி உதவித் தொகைத்  திட்டம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: