தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ஒவ்வொரு வாரமும் 3 டன் அளவிற்கு கேரளாவிற்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய பன்றி வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசால் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை தற்காலிகமாக தமிழகத்தில் இருந்து பன்றிகள் கொண்டுவரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 200 டன் அளவிற்கு பன்றிகள் தேங்கியுள்ளது. தற்போது அதனை கண்டித்து கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்க கூடிய பன்றி பண்ணை விவசாயிகள் கோவை எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து பன்றி பண்ணை வியாபாரம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், பன்றி பண்ணை விவசாயிகளை பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.இருப்பினும் அதிக அளவு கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்: கடந்த 4 மாதங்களாக பன்றிகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் பலகோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து தற்போது கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி அதிக அளவு பன்றிகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது இந்த தடையால் அது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இந்த தற்காலிக தடையை நீக்கவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: