சிவகாசியில் பணிகள் முழுவீச்சில் மும்முரம் புத்தாண்டுக்கு புதுப்பொலிவுடன் டைரிகள் தயார்: மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் 40 சதவீதம் விலை உயர்வு

சிவகாசி: சிவகாசியில் 2023ம் ஆண்டிற்கான  டைரி  தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் டைரி விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ‘தமிழகத்தின் குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படுகிறது. இங்கு பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் முக்கிய தொழிலாக திகழ்கிறது. பட்டாசு சீசன் முடிந்த நிலையில் காலண்டர், டைரி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது 2023ம் ஆண்டிற்கான டைரிகள் அச்சிடும் பணிகள் நூற்றுக்கணக்கான அச்சகங்களில் இரவு, பகலாக நடந்து வருகிறது.  இங்கு தயாராகும் டைரிகள் தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு ரூ.90 முதல் ரூ.600 வரை விலையுள்ள டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பேப்பர், அட்டை விலை உயர்வு காரணமாக டைரிகளின் விலை இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

பல்வேறு அளவுகளில், மேட் பைண்டிங், சேட்டின் பைண்டிங், லெதர் பைண்டிங், வெல்வெட் பைண்டிங் என பல்வேறு மாடல்களில் டைரிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, தமிழ், ஆங்கில டைரிகள், நல்ல நேரம், திதி, நட்சத்திரம், சந்திராஷ்டமம், உலக வரைபடங்கள் ஆகியவற்றை அச்சிடப்பட்ட டைரிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், சில டைரிகளில் தினசரி காலண்டர் சிலிப்பில் உள்ளது போல நல்லநேரம், சுபதினங்கள், அரசு விடுமுறை நாட்கள், தலைவர்களின் பிறந்த நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. சில டைரிகளில் தினம் ஒரு மருத்துவ குறிப்புகள், தினம் ஒரு பொன்மொழிகள் என விதவிதமான முறையில் டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சிவகாசி டைரி தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘‘விதவிதமான ஆப்கள் கொண்ட செல்போன்கள்,  சமூக வலைத்தளங்களின் தாக்கம் ஆகியவற்றை முறியடித்து டைரி எழுதும் பழக்கத்தை தக்க வைப்பது, தூண்ட வைப்பது அச்சுத்தொழிலுக்கு பெரும் சவாலாக உள்ளது.  இதனால், பொதுமக்களை கவரும் வகையில் சிவகாசியில் புதுவிதமான டைரி தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறோம். இங்கு தயாராகும் டைரிகள் தரமான காகிதத்தில், உறுதியான அட்டைகளால் பைண்டிங் செய்யப்பட்டு, பல வண்ணங்களில் அச்சிடப்படுகிறது. இதனால், இங்கு தயாராகும் டைரிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

டைரிக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள மேப்லித்தோ பேப்பர் கடந்த ஆண்டு டன்னுக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பாலிபோர்டு முதல்தர அட்டை, இந்த ஆண்டு ரூ.48 ஆயிரத்திற்கு வாங்க வேண்டியுள்ளது. இந்த கடுமையான   விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டை விட டைரி விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது’’ என்றனர்.

Related Stories: