நெல்லையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1196 மாணவர்களின் அறிவியல் மாதிரிகள் அறிமுகம்: மாநில போட்டிக்கு குழுக்கள் தேர்வு

நெல்லை: நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 30வது தேசிய குழந்தைகள்  அறிவியல் மாநாடு நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்து 196  மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை அறிமுகப்படுத்தினர்.தமிழ்நாடு  அறிவியல் இயக்கம், நெல்லை, தென்காசி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம்,  மாவட்ட அறிவியல் மையம், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி  ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடந்தது.

இதை முன்னிட்டு பள்ளி மாணவ  மாணவிகளுக்கு, ‘ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை  புரிந்துகொள்வது’ என்ற தலைப்பில் அறிவியல் படைப்புகளை தயாரிக்கும் போட்டிகள்  நடத்தப்பட்டன. 6  முதல் 8ம் வகுப்பு மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு என இரு பிரிவுகளாக போட்டிகள்  நடத்தப்பட்டன. இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து ஒரு  குழுவிற்கு 2 பேர் வீதம் மொத்தம் 1196 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் தங்கள் படைப்பை தயாரிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதை அடுத்து நேற்று இவர்கள் தங்கள்  அறிவியல் படைப்புகளை எடுத்து வந்து விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி  காலையில் தொடங்கி மாலை வரை நடந்தது. சிறந்த படைப்புகளை தந்த மாணவர்  குழுவினர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கான சிறந்த படைப்பாளர்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டனர்.  மாநில போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற உள்ளன.

முன்னதாக  நேற்று காலை நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் மைய அலுவலர்  எம்.குமார் தலைமை வகித்தார். செயலாளர் பால்ராஜ், மாரி லெனின் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். அய்யப்பன் வரவேற்றார். தென்காசி மாவட்ட தலைவர்  சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். உமேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து  ஆசிரியர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கமும் நடந்தது. மாலையில் நடந்த  நிகழ்ச்சியில் குழந்தை விஞ்ஞானிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. மாணவர்களுடன்  ஏராளமான ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

Related Stories: