×

4 லாரிகளில் வந்து ஜவுளிக்கடையில் ரூ2 கோடி துணிகளை சாவகாசமாக கொள்ளையடித்து சென்ற கும்பல்: பழநியில் அதிகாலை பரபரப்பு

பழநி: பழநியில் 4 லாரிகளில் வந்த 30 பேர் கொண்ட கும்பல், காவலாளியை சரமாரியாக தாக்கி விட்டு, ரூ.2 கோடி மதிப்பிலான ஜவுளிகளை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜோதி கணேஷ் (36). இவர் பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எம்ஜிஆர் நகரில் 30 ஆயிரம் சதுரஅடியில் ரெடிமெட் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இங்கு காவலாளியாக பழநியை சேர்ந்த தேவேந்திரன் (52) பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு கதவு இல்லாத நிலையில், தார்பாயில் தற்காலிகமாக கதவு வசதி செய்யப்பட்டுள்ளது.

கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பழுதானதால் சில நாட்களாக முடங்கி இருந்துள்ளது. நேற்று வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளி மட்டும் இரவு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் 4 லாரிகளில் 30க்கும் மேற்பட்டோர் ஜவுளி கடைக்கு வந்தனர். இவர்கள் அதிரடியாக லாரிகளுடன் கடை வளாகத்திற்குள் புகுந்தனர். நீங்கள் யார், எதற்கு கடைக்குள் லாரிகளுடன் வந்தீர்கள் என தேவேந்திரன் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், தேவேந்திரனை சரமாரியாக தாக்கியது. சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என கும்பலில் இருந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர், கடையில் இருந்து துணிகள் அனைத்தையும், லாரிகளில் தயாராக கொண்டு வந்த அட்டை பெட்டிகளில் கும்பல் பேக்கிங் செய்தது. இவைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்து லாரிகள் வெளியேறின. காவலாளி தேவேந்திரனையும் கும்பல் லாரியில் ஏற்றி கொண்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டது. பொள்ளாச்சி அருகே தேவேந்திரனை இறக்கி விட்ட அவர்கள், பஸ் செலவுக்காக ரூ.100 கொடுத்து விட்டு கொள்ளையடிக்கப்பட்ட ஜவுளிகளுடன் தப்பிச் சென்றனர். பஸ்சில் இன்று காலை பழநி வந்த காவலாளி, ஜவுளிக்கடை எதிரே இருந்த டீக்கடையில் இருந்து உரிமையாளர் ஜோதிகணேஷுக்கு தகவல் கொடுத்தார். ஜவுளிக்கடைக்கு வந்த ஜோதிகணேஷ் ஜவுளிகள் கொள்ளை போனது கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொடுக்கல்-வாங்கல் தகராறில் கடையில் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நான்கு லாரிகளில் வந்து ஜவுளிக்கடையை மட்டும் குறி வைத்து, ரூ.2 கோடி மதிப்பிலான ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்து துணிகள் அனைத்தையும், லாரிகளில் தயாராக கொண்டு வந்த அட்டை  பெட்டிகளில் கும்பல் பேக்கிங் செய்தது. இவைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு  அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்து லாரிகள் வெளியேறின.

Tags : Palani , The gang came in 4 trucks and looted clothes worth Rs 2 crore from a textile shop: Early morning excitement in Palani
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்