விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்த நடவடிக்கை: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில மாவட்டங்கள் என தமிழ்நாட்டின்  80% பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கு  இந்த சாலை தான் பயன்படுத்தப்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக உயர்த்தப்பட்ட போது, அது தினமும் 35 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அப்போது அதைவிட குறைவான வாகனங்கள் தான் அந்த சாலையில் பயணித்தன.

ஆனால், இப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம் ஆகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்தும் கூட, அது குறைந்தபட்சம் 6 வழிச்சாலையாகவோ,  8 வழிச்சாலையாகவோ மேம்படுத்தப்படாதது தான் விபத்துகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

கொரோனா காலத்தில் குறைந்திருந்த போக்குவரத்து இப்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சம் என்ற அளவை அடுத்த சில மாதங்களில் எட்டக்கூடும். அத்தகைய சூழலில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும்.

அந்த சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: