×

கூட்டுறவு துறையின் மூலம் 5 கிலோ சிலிண்டர் விற்பனை: திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு  5 கிலோ எடை கொண்ட  சிறிய வணிக ரக சிலிண்டர் விற்பனை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தி.சண்முகவள்ளி வரவேற்றார். சப் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி,  கே.ஜெயக்குமார் எம்.பி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் என்.மதியழகன், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், துணை பதிவாளர்கள் காத்தவராயன், இரா.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கிவைத்து பேசியதாவது; தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களை சேர்ந்த சுய சேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள்  மற்றும் நியாய விலைக் கடைகள் மூலம் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக இரக சிலிண்டர்கள் விற்பனையினை மேற்கொள்ள தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் குறைந்த எடையிலான சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கூட்டுறவு சுய சேவை பிரிவு மற்றும் சிறப்பங்காடிகள் மூலம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக ரக சிலிண்டர் விற்பனைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இடம் பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் பயனடைவர்.  2 கிலோ, 5 கிலோ சிறிய வணிக ரக  சிலிண்டர்களை பெறுவதற்கு எவ்வித முகவரி சான்று சமர்ப்பிக்க தேவையில்லை.

அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1587 புதிய இணைப்பிற்கும், சிலிண்டரில் எரிவாயு நிரப்புவதற்கும் ரூ.525 என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ என்றார்.

Tags : Thiruvallur Collector , Sale of 5 kg cylinder through co-operative sector: Thiruvallur Collector inaugurated
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!