தண்ணீரை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிலக்கோட்டை பொதுப்பணி துறை அலுவலகம் முற்றுகை

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுப்பணி துறை அலுவலகத்தை பாசன விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில்  இருந்து ராஜவாய்க்காலில் வரும் தண்ணீர் செங்கட்டான்குளம் வழியாக நிலக்கோட்டை கொங்கர்குளம், மன்னவராதி கண்மாயை அடுத்து பாப்பன்குளத்திற்கு செல்கிறது. இந்நிலையில் ராஜவாய்க்கால் தண்ணீர் 10 நாட்களுக்கு செங்கட்டான்குளத்தை அடுத்த சீத்தாபுரம் அருகே இருபிரிவாக ஒரு பகுதி சீத்தாபுரம், நூத்துலாபுரம், குளத்துப்பட்டி கண்மாய்களுக்கும், மற்றொரு 10 நாட்களுக்கு நிலக்கோட்டை கொங்கர்குளம், மன்னவராதி கண்மாய், பாப்பன்குளம் கண்மாய்களுக்கும் விடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை பொதுப்பணி துறை அதிகாரி பரதன் முன்னிலையில் அப்பகுதி விவசாயிகள், கிராமமக்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையுடன் சீத்தாபுரம் பகுதி கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீர், மாலையில் இருந்து நிலக்கோட்டை கொங்கர்குளம், மன்னவராதி கண்மாய், பாப்பன்குளத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி நூத்துலாபுரம் பகுதியினர் இரவோடு, இரவாக பாப்பன்குளம் கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை செல்ல விடாமல் அடைத்து சீத்தாபுரம் பகுதிக்கு திருப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாப்பன்குளம் பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று தண்ணீரை சட்டவிரோதமாக அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடனடியாக ஒப்பந்த முறைப்படி தங்கள் பகுதிக்கு வரவேண்டிய தண்ணீரை திருப்பிவிட கோரியும் நிலக்கோட்டை பொதுப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுப்பணி துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: