திருவெற்றியூர்: அதிமுக ஆட்சியில் முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்ட கலையரங்கத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் 11வது வார்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை அருகில் திருவள்ளுவர் கலை யரங்கம் உள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த கலையரங்கம் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுவட்டார பொதுமக்கள், குறைந்த கட்டணத்தில் பிறந்த நாள் மற்றும் நிச்சயதார்த்தம், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.
மேலும் மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் கலையரங்கத்தில் இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடத்துவார்கள். இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கலையரங்கம் பராமரிப்பின்றி கிடப்பில் போடப் பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை. தற்போது கலையரங்கம் மாநகராட்சியின் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களை நிறுத்தும் இடமாக செயல்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வந்த கலையரங்கத்தை நவீனப்படுத்தி மீண்டும் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என வார்டு கவுன்சிலர் சரண்யா, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். ஆனாலும் நடவடிக்கை நடவடிக்கை இல்லை. குப்பை சேகரிக்கும் தனியார் பேட்டரி வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கலையரங்கம் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சுற்றுப்புற சுகாதாரமும் சீர்கெட்டுள்ளது. எனவே, மாநகராட்சி கலையரங்கத்தை தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.