×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக முதலுதவி மையம்: 2 டாக்டர்கள் தலைமையில் 6 பேர் குழு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதலுதவி மையத்தில் 2 டாக்டர்கள் தலைமையில் 6 பேர் குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர். இவ்வசதியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் அரசின் மருத்துவமனை அமைய இருப்பதாக அரசு அறிவிப்பும் மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. வருடம் தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. உள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என நாள்தோறும் 50 ஆயிரம் பேர் வரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை சில நாட்களில் ஏற்படுகிறது.

அப்படி வரிசையில் நிற்கும் பக்தர்கள் வயதானவர்கள், பெண்கள், நோயாளியாக இருக்கும் பட்சத்தில் திடீரென்று மயக்கமடைந்து விடுகின்றனர். அவர்களில் சிலர் அவ்வப்போது திடீர் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால், மீனாட்சியம்மன் கோயிலிலுக்கு அவசர ஊர்தியாக ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி மையம், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனை ஏற்று, முதற்கட்டமாக தனியார் அமைப்பு உதவியுடன் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு தீயணைப்பு நிலையத்திற்கும் உத்தரவிட்டது.

அதன் பேரில் மேற்கு கோபுரம் அருகே தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு, நிலைய அலுவலர் உட்பட வீரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர நிலையம் அமைக்க கிழக்கு கோபுரம் அருகே வருவாய் அலுவலகம் அருகே மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்து உள்ளது. புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அரசு டெண்ருக்காக காத்திருக்கிறது. விரைவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதேபோல் கோயிலுக்கு என பல்வேறு அடிப்படை வசதிகளை துணை கமிஷனர் அருணாச்சலம் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களில் யாருக்காவது திடீரென்று உடல்நல குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துமவனைக்கு அழைத்து செல்வதற்கு முன் முதலுதவி செய்ய மையம் கேட்கப்பட்டது. அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து, 2 டாக்டர்கள் உள்பட செவிலியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு கோயிலில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பக்தர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர். இதற்கென ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. மிக விரைவில் ஆகம விதிகள் படி மையம் அமைக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கோயிலுக்கு வருவதற்கு பேட்டரி வாகனங்களும் இயக்கப்பட உள்ளன’’ என்றார்.

* சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘கோயிலுக்கு வரும் பக்தர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்போது முதலுதவி மையம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் பெரிய கோயில்களில் ஒன்றான பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் கோயில் நிர்வாகம் சார்பில் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

அதுபோல் நீண்ட நாள் கோரிக்கையாக மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டதில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செவி சாய்க்கவில்லை. தற்போது புதிய ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவ உதவி மையம் அமைத்து வருகிறது. இது விரைவில் முழு மருத்துவமனையாக அமைய இருப்பதாகவும் தற்போது அரசு அறிவித்திருக்கிறது மகிழ்வளிக்கிறது. கூடுதலாக குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்வதுடன், 2018 பிப்.2 ஏற்பட்ட தீவிபத்தில் பாதித்து நடந்து வரும் சீரமைப்பு பணிகளிலும் அரசு கூடுதல் கவனம் காட்டி வருவது நிறைவளிக்கிறது’’ என்றார்.

Tags : First Aid Center for Devotees Facility ,Meenatisiyamman Temple ,Madurai , First Aid Center at Madurai Meenakshiyamman Temple for the convenience of devotees: 6 members team led by 2 doctors
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...