×

அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரியலுார்: அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.279.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இன்றைய தினம் அரியலுாரில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில்  முதலமைச்சர் பெரம்பலுார் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

*நெடுஞ்சாலைத் துறை

நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ் 209 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் துறையூர் - பெரம்பலூர் சாலையில் 30 கி.மீ. நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து நக்கசேலம் மற்றும் குரும்பலூர் நகரப் பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

*பள்ளிக்கல்வித் துறை

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், ஆலத்தூர் வட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 82 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் 2 கழிப்பறைகள் கொண்ட கட்டடம் முடிக்கப்பட்டுள்ளது.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
    
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புக் கட்டடம், குன்னம் வட்டம், மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

* கூட்டுறவுத் துறை

கூட்டுறவுத் துறை சார்பில் தொண்டப்பாடி, புஜங்கராயநல்லூர், கூத்தூர், மருவத்தூர், வெங்கனூர், நூத்தப்பூர், பொன்னாகரம், துங்கபுரம், சிறுகன்பூர் மற்றும் வயலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் வட்டம், லாடபுரம் கிராமத்தில் 1 கோடியே 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடம் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 89 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில்  கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 72 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலைகள் மற்றும் 31 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகள், கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் 8 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகள், லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு சாலை முதல் மேற்கு சாலை வரை 72 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் மற்றும் வடிகாலுடன் கூடிய பேவர் பிளாக் சாலைகள் என மொத்தம் 221 கோடியே 80 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
 
இவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வேப்பந்தட்டை கிராமத்தில் 4 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் மற்றும் 4 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம், உயர்கல்வித் துறை சார்பில் பெரம்பலூர், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதுகலை விரிவாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை   

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் லெப்பைக்குடிகாடு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், வேப்பூர் ஒன்றியம் - மருவத்தூர் கிராமத்திலும், ஆலத்தூர் ஒன்றியம் - ஆதனூர் கிராமத்திலும் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், பெரம்பலூர் ஒன்றியம் - செஞ்சேரி கிராமத்தில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட இப்ராஹிம் தெரு முதல் கடப்பக்குட்டை வரை மற்றும் கடம்பூரான் கோயில்  தெரு முதல் பச்சமலை சாலை 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
    
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஒதியம், பெரியம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், கூத்துார், கண்ணப்பாடி, குரூர், மாவிலங்கை, தேனூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், அகரம், அயன்பேரையூர், தேவையூர், எறையூர், வி. களத்தூர், திருவாளந்துரை ஆகிய ஊராட்சிகளில் 9 கோடியே 85 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு, மின்மோட்டார் அறை மற்றும் வீடுகளுக்கு குடிநீர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள், கிராம குடிநீர் திட்டத்தின் கீழ் காரை, கீழமாத்தூர், எலந்தங்குழி, ஆதனூர், இராமலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 48 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் அறை, பைப்லைன் விஸ்தரிப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் என மொத்தம் 31 கோடியே 37 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2781 பயனாளிகளுக்கு 6 கோடியே 25 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 88 பயனாளிகளுக்கு  21 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 72 பயனாளிகளுக்கு 32 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு 52 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பயனாளிகளுக்கு 2 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 46 பயனாளிகளுக்கு 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 140 பயனாளிகளுக்கு 15 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 888 பயனாளிகளுக்கு 23 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 951 பயனாளிகளுக்கு 38 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

* கூட்டுறவுத் துறை

கூட்டுறவுத் துறை சார்பில் 460 பயனாளிகளுக்கு 1 கோடியே 17 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 9,621 பயனாளிகளுக்கு 26 கோடியே 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், எம். பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,Perambalur district ,Ariyalur district ,K. Stalin , Ariyalur, Government function, Perambalur District, Completed, Project work, Chief Minister M.K.Stalin
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...