கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜவுக்கு நன்கொடை; குஜராத் சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுமா?: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மாநிலத்திற்காக தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடை ரூ.174 கோடி. இதில் பாஜவுக்கு மட்டும் ரூ.163 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 94 சதவிகிதம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்ற காரணத்தால் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தோடு, அதிகார பலமும் சேர்ந்து சுயேட்சையாக, நியாயமாக தேர்தல் நடைபெற முடியாத சூழலை பாஜ உருவாக்கியிருக்கிறது.

மோடி அரசு இத்தகைய நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைகளையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்திருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் துணை போய்க் கொண்டிருகிறது.  இத்தகைய அநீதிகளை எதிர்த்து தான் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் பொதுமக்களை திரட்டி பாஜ ஆட்சிக்கு எதிராக ஆதரவை திரட்டி வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: