பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்; பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்கா துவக்க விழா மற்றும் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிப்காட் தொழில்பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, தமிழக முதல்வரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆக.23ம் தேதியன்று துறை சார்ந்த காலணிக் கொள்கை வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் இரண்டாவது காலணி பூங்காவாக இது இருக்கும். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான தனிக்கொள்கை வெளியிடப்பட்ட ஆக.23ம் தேதி அன்று கோத்தாரி பீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அதன் மூலம், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. நேற்று தமிழக முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 4,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படு வதன் மூலமாக பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர் நிலை அடையும். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, தொல்.திருமாவளவன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜாகுல்கர்னிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: