×

தென்மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் குறைந்த நேரம் மது விற்பனை; ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தென்மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் குறைவான நேரம் மது விற்கப்படுவதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது என்றும் மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்கள் அறிந்திட செய்ய வேண்டும். மதுபான விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார் அளிப்பதற்கான தொடர்பு எண் உள்ளிட்ட விபர பலகையை கடைகளில் வைக்கவும், மதுவில் சேர்த்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்களை தமிழில் தெரியப்படுத்தவும், விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, ‘‘தென்மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் குறைந்த நேரம் மது விற்பனை நடக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் தமிழகத்தில் மது விற்பனை இல்லை. இதனால் அண்டை மாநிலங்களுக்கு சென்று அதிகளவில் மதுபானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தினால் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துவிடும். அப்போது தேவையில்லாத பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மது விற்கப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஆனால் இங்கு தானே அதிகளவில் மது விற்கப்படுகிறது. விற்பனை நேரத்தை 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற பரிசீலிக்கலாமே’’ என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘‘குறைந்த அளவுள்ள மதுபானங்கள் அதிகளவு விற்பனையாகிறது. மதுபானங்களுக்கான வரிகள் வசூலிப்பால் அதிக வருவாய் எனத் தெரிகிறது. இந்த விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பான அரசின் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, அரசு தரப்பில் அறிக்கையாக  தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Tamil Nadu ,southern ,iCourt , Tamil Nadu has the lowest alcohol sales in southern states; Government Information at iCourt Branch
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...