×

தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்; அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை-பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெறாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர்  நீதிபதி எம்.தண்டபாணி முன்பு ஆஜராகினர். அப்போதைய மாவட்ட கலெக்டர் பொன்னையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட கலெக்டருக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் மாவட்ட வருவாய் அதிகாரிக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தெரிவித்தார்.
 
அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை நான்கு கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போலி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை. இழப்பீடாக் கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது. அந்த பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். பொதுமக்களுடைய பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த நீதிமன்றத்தின் நோக்கம். இதில் கருணை காட்ட முடியாது. தவறாக கொடுக்கபட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெறாவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : CBI ,National Highway ,Madras High Court ,Govt , We will order a CBI probe if we do not recover money from those who have been illegally paid for the acquisition of land for the National Highway; Madras High Court orders Govt
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...