கெலாட்-பைலட் இருவரும் காங்கிரசின் சொத்துக்கள்; ராகுல் காந்தி முதன்முறையாக கருத்து

இந்தூர்: அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, 2 பேருமே காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் வலுத்துள்ளது. இதுபற்றி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் எனது முழுக்கவனமும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் தான் உள்ளது. அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் ஒன்றும் யாத்திரையை பாதிக்காது. ஆனால் இருதலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அப்போது அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் கூறுகையில்,’ எனது முழுக்கவனமும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருப்பதால் வேறு தலைப்பு செய்தி எதையும் நான் உங்களுக்கு தர விரும்பவில்லை. உங்கள் கேள்விக்கு எனது பதில் இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்தில் கிடைக்கும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருப்பதுதான் இன்றைய  முக்கிய பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சிறு,குறு தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நாட்டின் குரலை இந்திய ஒற்றுமை யாத்திரை எதிரொலிக்கிறது’ என்றார்.

Related Stories: