ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் ஏழைகளுக்கு இலவச முழு உடல் பரிசோதனை

சென்னை: முழு உடல்நலப் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்அப்) சேவைகள் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் ஏழ்மையான சமூக - பொருளாதார பின்புலத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனைக்கான குடும்ப அட்டை திட்டத்தை சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை,தொடங்கியிருக்கிறது. இந்த அட்டைதாரர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே முழு உடல் பரிசோதனையை இம்மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். மருத்துவரது ஆலோசனையைப் பெறலாம்.

இச்சிறப்பு திட்டத்தைப் பயன்படுத்தி பலன்பெற, தகுதியுள்ள எந்தவொரு நபரும் இம்மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து, வருவாய் சான்றிதழ் (ரேஷன் / குடும்ப அட்டை) மற்றும் அடையாள சான்றுக்கான ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து, முழு உடல் பரிசோதனைக்கான குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.  அதன்பிறகு, அவருக்கும், அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவிற்கு 1800 599 9600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இதற்கான அறிமுக நிகழ்வில் குழும நிறுவனங்களின் சேர்மன் ஜெகத்ரட்சகன் மற்றும் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ஜெ. ஸ்ரீநிஷா ஆகியோர் பங்கேற்று இத்திட்டத்தின் கீழ் பலன்பெறும் தகுதியுள்ள நபர்களுக்கு இந்த அட்டைகளை வழங்கினர்.  இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஜான்சன், மருத்துவ இயக்குனர் டாக்டர் குணசேகரன், ஆலோசகர் டாக்டர் வீரபாகு, பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பதிவாளர் டாக்டர் பூமிநாதன் மற்றும் எஸ்பிஎம்சிஎச் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

எஸ்பிஎம்சிஎச் தலைமை செயல் அலுவலர் டாக்டர் பிரபுதாஸ் தலைமையில் இயங்கும் ஒரு பிரத்யேக முழு உடல்பரிசோதனை பிரிவினை இம்மருத்துவமனை நிறுவியிருக்கிறது.  அனைத்து ரத்தப்பரிசோதனைகள், முக்கியமான நோயறிதல் செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பரிசோதனை திட்டத்தில் பொது மருத்துவம் மற்றும் பொது அறுவைசிகிச்சை ஆகியவற்றோடு இதயவியல், நீரிழிவியல், எலும்பியல், இஎன்டி, கண் மருத்துவம், மகளிர் நோயியல், புற்றுநோயியல் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் ஆகியவை உட்பட, அனைத்து சிறப்பு பிரிவுகளிலும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனைகளையும் பெறலாம்.

Related Stories: