×

மணலி மாநகராட்சி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்ற பெண்ணிடம் ரூ.2,500 கேட்டு செவிலியர் கெடுபிடி: நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 19வது வார்டு, மஞ்சம்பாக்கத்தில் மாநகராட்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மற்றும் பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களிடம் செவிலியர் ஒருவர்  பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்காத பெண்களிடம் மரியாத குறைவாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துகொள்ள அறிவுறுத்தினாலும் சம்பந்தப்பட்ட செவிலியர் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க விடாமல் வெளியில் தனியார் ஸ்கேன் சென்டரில் இருந்து ஸ்கேன் எடுத்து வருமாறு கெடுபிடி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட செவிலியர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தலைமை மருத்துவ அதிகாரியுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் மீது மருத்துவமனை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாத்துரை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரிடம் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ரூ.2,500 பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் இல்லை என்று கூறியதற்கு அவரிடம் செவிலியர் மரியாதை குறைவாக கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மாத்தூர் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் மருத்துவ அதிகாரியிடம் புகார் கொடுத்து சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். புகாருக்கு உள்ளான செவிலியர் ஏற்கனவே பாடி, மாதவரம் போன்ற மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பணம் கேட்ட புகாருக்கு உள்ளாகி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு மாற்றலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக வருபவர்களிடம் செவிலியர் பணம் கேட்டு தொந்தரவு செய்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Manali Municipal Hospital , Manali Municipal Hospital, Manali Municipal Hospital, woman who gave birth to a girl child, demanded Rs 2,500 by the nurse: lack of action
× RELATED மணலி மாநகராட்சி மருத்துவமனையில் பெண்...