வடதுருவக் காற்று கடுமையாக வீசுவதால் தமிழகத்தில் காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடதுருவத்தில் இருந்து குளிர் அலைகளுடன் கூடிய காற்று வங்கக் கடல் பகுதியில் நுழைந்ததால், கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதிக்கு கடும் குளிருடன் கூடிய காற்று வீசுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 9 மணி வரை தமிழகம் முழுவதும் பனிப்பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வடகிழக்கு பருவமழை பெய்வது சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக் கடலில் வடக்கு அந்தமான் பகுதி மற்றும் மியான்மரை ஒட்டிய மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து  வருகிறது. அதன் காரணமாக டிசம்பர் முதல் வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதேநேரத்தில், வட துருவப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி வீசும்  குளிர் அலையுடன் கூடிய காற்று வங்கக் கடலில் நுழைந்து, கடல் காற்றுடன் இணைந்து தரைப் பகுதியை நோக்கி வீசுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தரைப் பகுதியில் கடும்  குளிர் காற்று வீசும். அதே நேரத்தில் மழை பெய்து தரைப் பகுதியும் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், அதிக குளிரை உணர முடியும்.

இந்நிலையில், கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர் அலையுடன் கூடிய காற்று கடும் பனிப்பொழிவாக மாறும். அதன்படி தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்கள், தமிழக கடலோரத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. காலை 9 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடிக்கிறது. எதிரில் வரும் நபர்கள் தெரியாத அளவுக்கு பனி பொழிவதால், சாலைகளில் அனைத்து வாகனங்களும் விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிரும் நீடித்து வருகிறது.

 

குளிருடன் கூடிய பனிப்பொழிவு என்பதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச மண்டல நோய்களை மக்கள் சந்திக்க வேண்டியதுள்ளது. தற்போது வட துருவத்தில் இருந்து வீசும் குளிர் காற்று மேலும் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இனி வரும் நாட்களில் கடும் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். இந்த கடும் பனிப் பொழிவின் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்தம் வலுப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 2ம் தேதி தமிழக கடலோரத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும் போது, தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும்.

Related Stories: