×

அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; கேரளாவில் காவல் நிலையத்தை சூறையாடிய 3000 பேர் மீது வழக்கு: உதவி கமிஷனர் உட்பட 36 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்கள் நடத்திய போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.  விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உட்பட 36 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக 3 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி வர்த்தகத் துறைமுகத்திற்கு எதிராக கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக லத்தீன் கத்தோலிக்க சபை பிஷப் தாமஸ் ஜெ. நெட்டோ உள்பட 50க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மீது சதித்திட்டம், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்கக்கோரி, நேற்று முன் தினம் மாலை விழிஞ்ஞம் காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். திடீரென  அனைவரும் காவல் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை  அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஜீப்புகள் மற்றும் 2 வேன்களை அடித்து நொறுக்கினர். இரும்புக் கம்பி மற்றும் படகு துடுப்புகளால் போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பூ தொட்டிகளையும் தூக்கி போலீசார் மீது வீசினர்.

இதில் சங்குமுகம் உதவி கமிஷனர் ஷாஜி, விழிஞ்ஞம் இன்ஸ்பெக்டர் பிரஜீஷ் சசி உள்பட 36 போலீசார் காயமடைந்தனர். நிலைமை கை மீறி போனதால், கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு, ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் யூஜின் பெரராவுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று போராட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர்களை விடுவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கலவரத்தின் போது விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்திற்கு தீவைக்கவும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கலவரம் தொடர்பாக 3000 பேர் மீது கொலை முயற்சி, சதித்திட்டம், கலவரத்தை தூண்டுதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட குற்றப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பதற்றம் நிலவுவதால் 2 எஸ்பிக்கள் தலைமையில் விழிஞ்ஞம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Adani port ,Kerala , Protest against Adani port; Case against 3000 people who looted police station in Kerala: 36 cops including assistant commissioner injured
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...