ஒன்றிய அரசை கண்டித்து நாகை, திருவாரூரில் ரயில் மறியல்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட 1000 பேர் கைது

நன்னிலம்: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் 3 இடங்கள், நாகையில் ஒரு இடத்தில் திமுக கூட்டணி கட்சியினர் இன்று காலை ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் எம்பி செல்வராசு, எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். திருவாரூரில் இருந்து தஞ்சை வழியாக திருச்சிக்கு அதிகாலையில் ரயில் இயக்க வேண்டும். திருவாரூர் - காரைக்குடி தடத்தில் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்தி உடனடியாக சேவையை துவங்க வேண்டும். திருச்சியில் இருந்து திருவாரூர் வரை இரவு 7 மணிக்கு பிறகு ஒரு ரயில் இயக்க வேண்டும். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை வரும் ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.

திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் விரைவு சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை முன்வைத்தும், கிழக்கு டெல்டா பகுதியான நாகை, திருவாரூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் நாகை, திருவாரூரில் இன்று அனைத்து கட்சி ஒருங்கிணைப்பு போராட்ட குழு சார்பில் ரயில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அறிவித்தபடி இன்று மறியல் நடந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த சன்னாநல்லூர் ரயில் நிலையத்துக்கு இன்று காலை 8.20 மணிக்கு வந்த திருவாரூர்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை மறித்து அனைத்து கட்சிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் முத்துப்பேட்டை ரயில் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்த திருவாரூர்-காரைக்குடி பாசஞ்சர் ரயிலை மறித்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில் 100க்கும் மேற்பட்ேடார் போராட்டம் நடத்தினர். கொரடாச்சேரி அடுத்த பத்தூர் ரயில்வே கேட் அருகே மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நாகை எம்பி செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் மறித்து போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் போராட்டக்குழுவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 இடங்களிலும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: