×

சீன மக்களின் போராட்ட செய்திகளை சேகரித்த சர்வதேச பத்திரிகையாளருக்கு அடி உதை, கைது: இங்கிலாந்து செய்தி நிறுவனம் கண்டனம்

பீஜிங்: சீன மக்களின் போராட்ட செய்திகளை சேகரித்த சர்வதேச பத்திரிகையாளரை அடித்து உதைத்த போலீசார், அவரை கைது செய்ததற்கு இங்கிலாந்து செய்தி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு இதுவரை கண்டிராத அசாதாரண சூழலை கண்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசின் கறாரான லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தினசரி தொற்று பாதிப்பு சுமார் 40,000ஐ நெருங்கியுள்ள நிலையில், முன்னணி நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஸோ போன்ற பகுதிகளில் நோய் பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘ஜி ஜிங்பிங் பதவி விலக வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கலைய வேண்டும்’ என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  பல்கலைக்கழக மாணவர்கள் கைகளில் காலி வெள்ளை காகிதத்தை பிடித்து நூதன போராட்டத்தை நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசாரை அரசு களமிறக்கியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச ஊடகமான பிபிசி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எட் லாரன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பல மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து  ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘ஷாங்காயில் மக்கள் நடத்திய போராட்ட செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பிபிசி பத்திரிகையாளர் எட் லாரன்ஸ் என்பவரை சீன போலீஸ் கைது செய்துள்ளது என்று பிபிசி நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்ட அவரை அடித்து உதைத்தனர். சீன அரசால் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளராக பணியாற்றிய ேபாதும், அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளது’ என்று கூறியுள்ளது.


Tags : UK News Agency , International Journalist Kicked, Arrested For Collecting News Of Chinese People's Protests: UK News Agency Condemns
× RELATED சீன மக்களின் போராட்ட செய்திகளை...