புதுக்கோட்டை அருகே 4 பெண் குழந்தைகளின் தாய் மர்மச்சாவு-போலீஸ் விசாரணை

கறம்பக்குடி : புதுக்கோட்டை அருகே 4 பெண் குழந்தைகளின் தாய் தைலக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம்(38). இவரது மனைவி பழனியம்மாள்(35). திருச்செல்வம் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல் கடந்த 25ம் தேதி கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பழனியம்மாளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை தொம்புறம்பட்டி பகுதியில் உள்ள தைல மரக்காட்டிற்குள் பெண் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. பல்லவராயன்பத்தை ஊர் பொதுமக்கள் சென்று பார்த்தனர். இதில் கடந்த 23ம்தேதி காணாமல் போன பழனியம்மாள்தான் சடலமாக கிடப்பதை உறவினர்கள் உறுதி செய்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பழனியம்மாளின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பழனியம்மாள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பல்லவராயன்பத்தை-புதுப்பட்டி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆர்டிஓ முருகேசன், ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி, தாசில்தார் ராமசாமி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது விரைந்து விசாரணை நடத்தப்படுமென்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: