உடல் வெப்பம் தணிக்கும் மணத்தக்காளி!

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

கீரைகள் கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம். கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால்தான். நம் முன்னோர்கள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால்தான், இன்றும் அவர்களின் உடல் மிகவும் வலிமையுடன் உள்ளது. மேலும் கீரையினை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எந்த ஒரு நோயின் பாதிப்பும் எளிதில் ஏற்படாது. கீரைகளில் பல வகைகள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.

*வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும்.

*மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பச்சை இலையை நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

*தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். வாரம் இரண்டு முறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்னையும் நீங்கி விடும்.

*உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டுவர, உடல் வெப்பம் தணியும். காசநோய் உள்ளவர்கள் இந்தக் கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. கை கால் வலி, காய்ச்சலை போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

*சரும அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், மணத்தக்காளியின் சாற்றினை பிரச்னை உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.

*சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

*உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். கல்லீரல் பிரச்னைகள், மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.

*மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமைஅடையும்.

*மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தொகுப்பு: கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

Related Stories:

>