×

பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் :  பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாரத்தான் போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளான நிலையில் அதனை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. குறிப்பாக, சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் தனித்திறன் போட்டிகளை நடத்தியது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் நேற்று காலை நடந்தது. வேலூர் கோட்டை வளாகத்தில் நடந்த ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டை வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மக்கான், பழைய பஸ் நிலையம், தெற்கு காவல் நிலையம், ஊரீசு கல்லூரி, புதிய மாநகராட்சி அலுவலகம் வழியாக 5 கி.மீ தூரத்திற்கு சென்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. குளிரும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் 250க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையின் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Public Health Department Centenary Marathon Competition , Vellore: Collector Kumaravel Pandian flagged off the marathon on the occasion of centenary of Public Health Department.
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...