நாமக்கல் அருகே பரபரப்பு குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்

*பிடிஓ புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை

நாமக்கல் : நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்கப்பட்டது.

இதில், விட்டமநாய்க்கன்பட்டி மற்றும் மரூர்பட்டி, ஆவல்நாய்க்கன்பட்டி, அணியார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பழுதடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சிலுவம்பட்டி ஊராட்சியில், ரெட்டியார் தெருவில் உள்ள 60 ஆயிரம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இயந்திரத்தின் மூலம் துளையிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது.

 இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 1986ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தற்போதும் நல்ல நிலையில் இருந்துள்ளது. குடிநீர் தொட்டியின் இரண்டு இடங்களில் இயந்திரம் மூலம் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. குடிநீர் தொட்டியை அந்த ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தான் சேதப்படுத்தினார் என, ஊர் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நல்ல நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டியை, ஊராட்சி மன்றத் தலைவரே ஏன் சேதப்படுத்தினார்? என்பது தெரியாமல் அதிகாரிகள் திகைத்தனர். இதுகுறித்து நாமக்கல் பிடிஓ அருளாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேலிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு அவர், தனது தரப்பு விளக்கத்தை பதிலாக எழுதி கொடுத்தார். அதில், பொதுமக்களுக்கு புதிய டேங்க் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அதனை இடித்ததாக கூறியிருந்தார். இந்த பதிலில், அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.

உரிய அனுமதி சான்று பெறாமல், குடிநீர் தொட்டியில் துளையிட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் மீது, காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி, கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, சிலுவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் மீது, நல்லிபாளையம் காவல்நிலையத்தில், பிடிஓ அருளாளன் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிலுவம்பட்டி ஊராட்சியில் சேதப்படுத்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடனடியாக சரிசெய்யப்படும். மாற்று ஏற்பாடாக, அப்பகுதி மக்களுக்கு வேறு இணைப்பு மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Related Stories: